"நான் இவ்வளவு சுதந்திரமாக இருப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை!" என்று பதின்ம வயதில் எலும்பியல் காலணி (shoe lift) கிடைத்த பிறகு பவானியின் எதிர்வினை இருந்தது. இப்போது, மாற்றுத்திறனாளிகளையும் சுதந்திரமாக செயல்பட வைப்பதை தனது வாழ்நாள் குறிக்கோளாக மாற்றியுள்ளார்.
குட்டையான வலது காலுடன் பிறந்த எம்.பவானி (31) ரங்கசாங்கில் உள்ள அரசு சீனியர் செகண்டரி பள்ளியில் 11 ஆம் வகுப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டபோது இரண்டு கால்களுக்கும் இருந்த 5 அங்குல உயர வித்தியாசத்தை ஈடுசெய்ய shoe lift பொருத்தப்பட்டது. இது தனது வாழ்க்கையை மாற்றும் என்று 16 வயது பவானிக்கு தெரியாது.
பள்ளிப் படிப்புக்குப் பிறகு, பவானி டி.எட் (சமூக கல்வி) (D.Ed (Social Education)) படித்தார். அவர் இப்போது 'சர்வ சிக்ஷா அபியான்' இன் ஒரு பகுதியாக கல்வித் துறையுடன் ஒரு ஒப்பந்தத்தில் பணிபுரிகிறார், மேலும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து 21 குறைபாடுகளுக்கும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு கற்பிக்கிறார்.
2021 ஆம் ஆண்டில், கடற்படை மருத்துவமனையில் நடந்த மனநல ஆலோசனை அமர்வின் போது, பவானி விளையாட்டில் ஈடுபட பரிந்துரைக்கப்பட்டார், உடனடியாக அவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கான பயிற்சியைத் தொடங்கினார். 19 வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஸ்பிரிண்டில் தனது முதல் வெற்றியால் அவர் மகிழ்ச்சியடைந்தார். "நான் இந்த நிகழ்வை வெல்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை," என்று அவர் கூறுகிறார்.
'அந்தமான் எக்ஸ்பிரஸ்' என்று பிரபலமாக அறியப்படும் அந்தமான் நிக்கோபார் போலீஸ் தீயணைப்பு சேவையின் சிறந்த தடகள வீரர் கே.பி.மம்மு தனது வெற்றிகளுக்கு காரணம் என்று பவானி கூறுகிறார், அவர் தனது வயிற்றில் கொழுந்து விட்டெறியும் ஆர்வத்த தீயையும், அவரது கால்களின் வேகத்தையும் அடையாளம் கண்டு தன்னை ஊக்குவித்து பயிற்சி அளித்தார்.
2021 ஆம் ஆண்டில் தனது முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்ற சிறிது நேரத்திலேயே, பவானி ஒரு தடையை எதிர்கொண்டார் - போர்ட் பிளேயரில் ஓட்டப்பந்தயத்திற்கு பயிற்சி அளிக்க பிரத்யேக தடங்கள் இல்லை! ஆனால் ஒரு உண்மையான தடகள வீரரைப் போல, அவர் தடையைத் தாண்டி குதித்தார், மேலும் நீளம் தாண்டுதலிலும் பயிற்சியைத் தொடங்கினார்.
அன்றிலிருந்து பவானியை முன்னேற்றத்தை நிறுத்த ஒரு தடையும் இல்லை. இதுவரை 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். "எனது இடத்திற்காக, எனது தேசத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. தடகளம் எனக்கு பங்களிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது, "என்று அவர் கூறுகிறார்.
கோவாவில் நடைபெற்ற 22 வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப், 2024 இல் பங்கேற்க தனது பயணங்களை ஸ்பான்சர் செய்த கல்வித் துறை உறுப்பினர்களின் நல்லெண்ணத்திற்கு பவானி நன்றியுள்ளவராக இருக்கிறார், அங்கு அவர் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். மாவட்ட கல்வி அதிகாரிகளான சங்கீதா சந்த் மற்றும் கியான் ஷீல் துபே ஆகியோரின் விரிவான ஆதரவை பவானி எடுத்துரைக்கிறார், அவர்கள் ஒவ்வொரு அடியிலும் மிகவும் ஆதரவாக உள்ளனர். "எனது சக ஆசிரியர்களும் பள்ளியில் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்; என் செலவுக்கு அவர்கள் பணம் திரட்டுகிறார்கள்" என்று பவானி பகிர்ந்து கொள்கிறார்.
பவானியின் வாழ்க்கையில் ஒரு வழக்கமான நாள் ஓய்வே இல்லாத நாள். தனக்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ நேரமில்லை. சிறப்பு கல்வியாளர் மற்றும் ஆறு வயது அர்ணவ்வின் தாயாக தனது கடமைகளுடன், பவானி ஜூனியர் விளையாட்டுகளில் மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். மற்ற ஆசிரியர்களும் சமூகப் பணி பயிற்சிக்காக அவளிடம் வருகிறார்கள்.
பவானியின் கனவு: "அந்தமானை ஒலிம்பிக்கிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நான் தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நம் அனைவரையும் பெருமைப்படுத்த விரும்புகிறேன். விருதுகள் மற்றும் பாராட்டுகளுக்கு அப்பால், இந்திய தீவுக்கூட்டத்தில் பாராலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் விளையாட்டுகளுக்கான வசதிகள் குறித்தும் அவர் மிகவும் தேவையான கவனத்தை கொண்டு வந்துள்ளார். பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்க அந்தமான் நிக்கோபார் தீவுகளின் விளையாட்டு செயலாளர் பவானிக்கு தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். சம்பிரதாய சந்திப்புக்காக காத்திருக்கும் பவானிக்கு, தீவுகளில் பாராலிம்பிக் விளையாட்டுகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற தனது கனவு நினைவாக செய்ய வேண்டிய பணிகளை உணர முடிகிறது.
பவானி தனது லட்சியத்தில் உறுதியாக இருக்கிறார். அவர் இப்போது யோகிதா அறக்கட்டளையை நிறுவி வருகிறார், அங்கு அவர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டில் பயிற்சி அளிப்பார். "தீவுகளில் உள்ள பெற்றோர்கள் ஊனமுற்ற குழந்தைகளுக்கு விளையாட்டு வசதிகள் இல்லை என்று என்னிடம் கூறுகிறார்கள். அவர்கள் வளர்ந்த பிறகு வேலை வாய்ப்புகளும் இல்லை. ஊனமுற்ற குழந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், விளையாட்டு அவர்களுக்கு உதவும். அந்தமானில் அனைத்து விளையாட்டு வசதிகளும் இருக்க வேண்டும். எங்கள் குழந்தைகளில் ஒருவராவது சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற முடிந்தால், அது மிகவும் நன்றாக இருக்கும்."