சதீஷ் (14) ஒரு பிடித்த பொழுதுபோக்கைக் கொண்டிருக்கிறார்: போர்ட் பிளேயரில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து, மலைகளையும் படகுத்துறையையும் பார்த்து, தனது தந்தையின் படகைக் கண்டுபிடிக்க முடியுமா என்று கடலைப் பார்ப்பது. "அப்பா வருகிறார்", என்று அவர் மீண்டும் மீண்டும் கூறுகிறார் - அவர் ஒரு நேரத்தில் சில வார்த்தைகள் மட்டுமே பேசுகிறார், அதுவும் அரிதாக. சாத்தம் தீவில் (Chatham Island) அந்தமான் பொதுப்பணித் துறையில் பணியாற்றி வரும் அவரது தந்தை பி.ரமேஷ், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே தனது குடும்பத்தைப் பார்க்க விடுமுறை பெறுகிறார். சதீஷுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது மனைவி புண்யவதி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் மற்றும் அவரது தங்கை வைஷ்ணவி (12) ஆகியோருடன் போர்ட் பிளேருக்கு குடிபெயர்ந்தார்.
ரமேஷ் மற்றும் புண்யவதி இருவரும் தங்கள் மகனின் தாமதமான நோயறிதலுக்கு வருந்துகிறார்கள். "எங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தால் நாங்கள் முன்பே சிகிச்சை பெற்றிருப்போம், அவர் இந்நேரம் நன்றாக இருந்திருப்பார்", என்று அவர்கள் கூறுகிறார்கள். தங்கள் முதல் குழந்தை எதிர்பார்த்த வயதில் தவழ்ந்து உட்காராதபோது தம்பதியினர் கவலைப்பட்டனர், ஆனால் சாத்தம் தீவில் உள்ள மருத்துவர் அவர் கொஞ்சம் மெதுவாக இருப்பதாகவும், குணமடைவார் என்றும் அவர்களிடம் கூறினார். அவர் உள்ளூர் அரசுப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். ஆனால் ஐந்தாம் வகுப்பை அடைந்ததும் அவர் பேசுவதையே நிறுத்திவிட்டார். (சில ஆட்டிசக் குழந்தைகள் வாய்பேசாதவர்கள், அதாவது அவர்களால் பேச முடியாது, மற்றவர்கள் பேச வேண்டாம் என்று தேர்வு செய்கிறார்கள்.)
தம்பதியினர் சதீஷை போர்ட் பிளேருக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமில் (autism spectru) இருப்பதாக சான்றிதழ் பெற்றார். அதிர்ச்சியும், மறுப்பும் அடைந்த அவர்கள் இரண்டாவது கருத்தைப் பெற வேலூர் சென்றனர். ஆனால் இந்த உண்மையை ஏற்றுக்கொண்ட ரமேஷ் தனது குடும்பத்தை போர்ட் பிளேயரில் வசிக்க அனுப்ப முடிவு செய்தார், ஏனெனில் அங்கு சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் ஒரு சிறப்புப் பள்ளியும் இருந்தது. "போர்ட் பிளேயருக்கு இடமாற்றம் செய்யுமாறு நான் பலமுறை கோரியுள்ளேன், ஆனால் அது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை" என்று அவர் வருத்தத்துடன் கூறுகிறார். அவசர நிலை ஏற்படும்போது அவரது இருப்பு இன்றியமையாததாகிறது; ஆறு மாதங்களுக்கு முன்பு புண்யாவதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு வாகனம் அவர் மீது மோதியது, அதனால் குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காக போர்ட் பிளேருக்கு விரைந்தார்.
எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள புண்யவதி, வீட்டுப் பணியாளராக இருந்தார், ஆனால் தனது வேலையைச் சமாளிப்பது மற்றும் சதீஷைக் கவனிப்பது கடினம் என்று உணர்ந்தபோது அவர் வேலையை விட்டுவிட்டார். அவரது "நடத்தை சிக்கலை" (behavioural problem) நிர்வகிப்பதில் இந்த ஜோடி பயிற்றுவிக்கப்படவில்லை; திடீரென அவர் தனது தாய் மற்றும் சகோதரியை கூட தாக்கும் அளவுக்கு அவரது ஆக்ரோஷ வெடிப்புகள் தூண்டுகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. "அவன் ஆவேசமாக (hyper) இருக்கும்போது அவனைக் கட்டுப்படுத்துவது எங்களுக்கு கடினமாக இருக்கிறது," என்கிறார் ரமேஷ். "அவன் பொருட்களை உடைக்கிறான். ஒரு நாள் பாத்ரூம் கதவை உடைத்தான்."
அவரது நுண்ணிய அசைவுகள் fine motor skills பாதிக்கப்பட்டுள்ளதால், சதீஷ் எழுதுவது கடினம், மேலும் அவரது ஆடைகளை அணிய உதவி தேவைப்படுகிறது. அவரது பெற்றோருக்கு மிகவும் வருத்தமான பிரச்சினை என்னவென்றால், மலம் கழித்த பிறகு அவரால் தன்னைக் கழுவ முடியவில்லை. புண்யவதி வருத்தத்துடன் கூறுகிறார், "நான் அவரை சுத்தம் செய்யும் போது என் கையைப் பிடிக்க வைப்பேன், இதனால் நான் என்ன செய்கிறேன் என்பதை அவர் அறிந்துகொள்வார், ஒருவேளை மெதுவாக அதை அவரே செய்ய கற்றுக்கொள்ளலாம். இன்று நான் இருக்கிறேன், நாளை நான் இருக்க மாட்டேன்; அப்புறம் யார் செய்வாங்க?"
சதீஷ் தான் ரசிக்கும் ஒரு சிறப்புப் பள்ளிக்கும், வழக்கமான பள்ளிக்கும் செல்கிறார், அங்கு அவர் வகுப்பிற்கு வருவதற்கு மட்டுமே மதிப்பெண் பெறுகிறார். புண்யவதி அவனுடன் செல்கிறாள். காலை நேரங்களில் பிசியோதெரபி மற்றும் சிறப்புக் கல்வி பெறுகிறார், அதன் பிறகு "அவன் வெறுமனே வகுப்பில் உட்கார்ந்து இருப்பான்" என்று சொல்கிறார். வீட்டில், அவர் டிவி பார்க்கிறார், ஒரு பந்தைச் சுற்றி எறிகிறார் அல்லது அவரது சகோதரியுடன் விளையாடுகிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி, அறிவியல் மற்றும் கணிதத்தை விரும்புகிறார், மேலும் அவர் வளர்ந்த பிறகு மருத்துவராக விரும்புகிறார், "நான் என் சகோதரனை மிகவும் நேசிக்கிறேன். அவர் எப்போதும் என்னை பாதுகாக்க இருக்கிறார். அவர் என்னை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வார், மேலும் எனது டியூஷன் வகுப்பிற்கும் என்னை அழைத்துச் செல்கிறார். அவளது அம்மா கூறுகையில், "யாராவது அவளைத் திட்டினால் அவனுக்கு மிகவும் கோபம் வருகிறது. நான் அவளை அடிக்க முயன்றால், அவன் என்னைத் தடுக்க எங்கள் நடுவில் வருகிறான். அவள் அழுவதைப் பார்த்தால் அவளிடம் சென்று 'அழாதே' என்று சொல்வான்."
புண்யவதி சில சமயங்களில் சதீஷின் ஆரம்பகால நினைவுகளை அசைபோடுகிறார். "அவன் ஒரு அழகான, அழகான குழந்தை. என் பெற்றோர், மாமியார் உட்பட அனைவரும் அவனது பிறப்பைக் கொண்டாடினோம். அப்புறம்..." ஒரு கணம் அவள் விரக்தியடைந்தவளாகத் தோன்றினாள், ஆனால் பின்னர் அவள் விரைவாக தன்னைத் தேற்றிக் கொள்கிறாள், "குறைந்தபட்சம் அவனது இயலாமை மற்றவர்களைப் போல கடுமையானதல்ல. அவனால் நடக்க முடியும், அவன் வெளியே செல்ல விரும்புகிறான். நாங்கள் சந்தைக்குச் செல்லும்போது அவன் பைகளை எடுத்துச் செல்கிறான், பின்னர் அவன் எனக்கு உதவுகிறார் என்று நான் மகிழ்ச்சியடைகிறேன்." அவள் அவ்வப்போது தன் சோகமான எண்ணங்களை ரமேஷிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவன் அவளை உற்சாகப்படுத்தி, "மனம் தளர வேண்டாம். நல்ல நாட்கள் அமைய பிரார்த்தனை செய்வோம்."
சதீஷ், அவரது பெற்றோர் ஆர்வத்துடன் நம்புவது போல, அவரது மிக அடிப்படைத் தேவைகளை சுயாதீனமாக கவனித்துக் கொள்ள முடிந்தால் மட்டுமே நல்ல நாட்கள் வரும்.